தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்
சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக் கொண்ட முதல்ச் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்ல்த் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாகயிருந்தார். இவற்றையெல்லாம் கதைத்துக் கொண்ட போது மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவலும், ஆதங்கமும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் அவர் ஒரு அதிதீவிரமான தேசியவாதியாகயிருந்தார். தமிழ்த் தேசியமென்பது புலிகளைக் குறிக்கும் கற்றவர்களின் வார்த்தையென்பது மாதிரியாக வேறு உரையாடினார். தவிரவும், சமாதானம் பூத்த காலத்தில் வன்னிக்கு வந்து ஒற்றைக்காலில் நின்று இயக்கப் பெண்களுடன் புகைப்படமும் எடுத்துச் சென்றவர் என்ற விபரத்தையும் நான் அறிந்தே வைத்திருந்தேன்.
நண்பர் அறிய விரும்பிய முக்கியஸ்தர்கள் எல்லோருமே ஊர், உலகம் அறிந்தவர்கள்தான். அவர்களது அறிக்கைகளினாலும், பேட்டிகளினாலும் முன்னர் தமிழ்ஊடகங்கள் நிறைந்துமிருந்தன. அவர்கள்தான் விடுதலைப்புலிகளின் குறியீடு என்றுமிருந்தது. அவர் ஒவ்வொரு பெயராக உச்சரிக்க உச்சரிக்க, எனக்குத் தெரிந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். இந்த வரிசையில் உரையாடல் போய்க் கொண்டிருக்கையில் இடையில் அவர் ஒரு பெயரை உச்சரித்தார். எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் கிடையாது. ஆனால் நண்பரின் முக்கியஸ்தர்கள் பட்டியலில் இருந்தார். நான் இதனைச் சொன்னபோது, ‘அவர் தகடு குப்பி போட்டிருக்காட்டிலும் இன்னும் நாலைஞ்சு வருசம் இருந்திருந்தால் கட்டாயம் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக வந்திருப்பார்’ என சீரியசாகவே சொன்னார். அவர் உச்சரித்த பெயர் தி.தவபாலன்.
புலிகள் அமைப்பிலிருந்து வெளித் தெரியாமல் இறந்து போன எண்ணற்ற முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகள் உள்ளன. ஆனால் அமைப்பில் இருக்காமல் ஒரு முக்கியஸ்தர் அளவு புகழுடன் இருந்தவர் தவபாலன். அவரளவிற்கு தீவிரமான தகடு குப்பி அணியாத பிறிதொருவரை நான் கண்டேயிருக்கவில்லை. தன்னுடலில் உயிர் தங்கியிருப்பது விடுதலைப்புலிகளை விசுவாசிக்கவே என்பது மாதிரியாக செயற்பட்டுக் கொண்டிருந்தார். அமைப்பிலிருந்தவர்கள் ஆயுதங்களினாலும், உயிரினாலும் யுத்தம் செய்து கொண்டிருக்க அவர் எதிரிகளுடன் வார்த்தைகளினால் யுத்தம் செய்து கொண்டிருந்தார். புலிகளின் வானொலியில் சாதாரண அறிப்பாளனாக நுழைந்து, இறுதியில் அவரது குரலின் மீதே அந்த வானொலி கட்டமைக்கப்பட்டிருந்தது. அவர்தான் புலிகளின் குரல் வானொலியை தாங்கிக் கொண்டிருந்தார். ரவைகளினதும், செல்களினதும் வெடிமருந்து வாசைனயும், மரணத்தின் வாசனையும் மிதந்து கொண்டிருந்த நிலத்திலிருந்து மே மாதம் பதினேழாம் திகதி வரை அவரது குரலும் மிதந்து வந்து கொண்டேயிருந்தது. வானெலியினூடாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தனது மூர்க்கமான குரலின் வழியாக, தான் சார்ந்திருந்த அமைப்பிற்கு வெற்றிகள் எதனையாவது ஈட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்ற தீராத தாகம் அவருள் இருந்திருக்கக்கூடும்.
அவருக்கு நகைச்சுவையாக பேசவே தெரியாது. எப்பொழுதும் எதிலும் சீரியசானவர். மரபான வானொலி அறிவிப்பாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் எந்தத் தகுதியையும் அவர் கொண்டிருக்கவில்லை. நேயர்களைக் கவர்வதற்கு எந்தப் பிரயத்தனத்தையும்பட்டிருக்கவில்லை. களத்தில் நிற்கும் ஒரு போராளியைப் போலவே அவர் கலையகத்தில் மைக்கின் முன்பாக உட்கார்ந்திருந்தார். அவ்வளவு மூர்க்கமாகவும், ஆவேசமாகவும் மூச்சு விடாமல் கத்திக் கதைத்துக் கொண்டிருப்பார். நேரில் இதற்கு முற்றிலும் முரணான மனிதனாகயிருந்தார். இரகசியம் கதைப்பவரைப் போல கதைப்பார். கலைந்த தலையும், ஒழங்கற்ற உடையும்தான் எப்பொழுதும் அவரது அடையாளங்கள். பார்ப்பவர்களிற்கு, அவர் ஏதோ யுத்த முன்னரங்கிலிருந்து வருபவர் போல தோற்றம்காட்டும்.
இப்படித்தான் அவர் எல்லோராலும் அறியப்படும் ஒரு மனிதரானார். அதிலும் இறுதி யுத்த காலத்தில் காலை ஒளிபரப்பு நான்கு மணித்தியாலங்கள் என்றால், அதில் செய்தியறிக்கை, வீரச்சாவு அறிவித்தல், ஓரிரண்டு பாடல் என்பவற்றிற்காக ஒரு அரைமணித்தியாலம் கழித்தால் மிகுதி மூன்றரை மணித்தியாலங்களும் அவரே கதைத்துக் கொண்டிருந்தார். சமயங்களில் செய்தியறிக்கையையும் அவரே வாசித்துவிடுவதுண்டு. நல்ல வேளையாக அவர் எந்த இயக்கப்பாடலையும் பாடியிருக்கவில்லை.
****
பெரும்பாலானவர்களைப் போலவே எனக்கும் அவர் வானொலிப் பெட்டி மூலமாகவே அறிமுகமானார். பின்னாட்களில் நண்பர்களின் மூலம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம் இருவரும் அதிகமும் கதைத்துக் கொண்டதும் கிடையாது. சந்திக்கும் பொழுதிலெல்லாம், அந்த மனிதரிடம் கதைப்பதற்கு எதுவுமேயில்லை என்பது மாதிரியான ஒரு உணர்வு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. தவிரவும், இயல்பான உரையாடலுக்கு உரியவருமல்ல அவர். ஆவரைத் தெரிந்து கொண்ட குறுகிய காலத்திலேயே, அவரொரு முரண்பட்ட ஆளுமையென்பதை தெரிந்து கொண்டேன். அவரது இளமைப்பருவ வாழ்க்கை முறைமை அல்லது வேறு ஏதோ காரணங்களின் நிமித்தத்தினால் இத்தகைய ஒரு மனிதராக உருவாகியிருந்தார். வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் ஏற்பட்ட புறக்கணிப்பும், புரிந்து கொள்ளப்படாமையும் காரணங்களாக இருந்திருக்கக்கூடும். இந்தக்காரணங்களினாலேயே, எல்லோரையும் வெற்றிகொண்டவிட வேண்டுமென்ற வெறி அவருள் இருந்து கொண்டேயிருந்திருக்கலாம். அதுதான் அவரை ஓயாத உழைபாபாளனாகவும் மாற்றியிருக்க வேண்டும்.
அறிமுகமானதற்கு பின்னர், வீதியில் எதிர்ப்படும் சமயங்களில் இரண்டு விதமான தவபாலனை காண நேர்ந்தது. சில சமயங்களில் நன்றாகச் சிரித்து தலையாட்டிவிட்டுப் போவார். சமயங்களில் தூரத்திலேயே கண்டு, காணாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டு போவார். அவரது அன்றைய மனநிலையே உறவுகளை தீர்மானிப்பதாகயிருந்தது.
அவருடன் பேசுவதற்கு பொருளற்றுப் போனதற்கு, இன்னொரு முக்கிய காரணமுமிருந்தது. அவரை சந்திப்பதற்கு பல வருடங்களின் முன்பாகவே அவரைப்பற்றிய முழுமையான விபரத்தையும் தெரிந்துவிட்டேன்.
ஈழநாதம் ஆசிரியராக இருந்த ராதேயன் அண்ணை இந்தக்கதையை சொல்லியிருந்தார்.
ஒருநாள், வைமன் வீதியிலருரந்த ஈழநாதம் அலுவலக மேல் மாடியில் ராதேயன் அண்ணை இருந்த சமயம் கீழே வாசலில் பெரிய சத்தம் கேட்டிருக்கிறது. அறையிலிருந்து எட்டிப் பார்த்திருக்கிறார். மிகப்பழைய சைக்கிள் ஒன்றை வீதியில் போட்டுவிட்டு, இளைஞனொருவன் காவலாளியுடன் தர்க்கப்பட்டுக் கொண்டிருந்தான். கலைந்த தலையும், அழுக்கான உடையும் பத்திரிகை அலுவலகத்திற்கு வருமொருவனாக அவனை காவலாளியினால் கற்பனை செய்ய முடியவில்லை. இறுதியில் இவர்தான் தலையிட்டு பிரச்சனையை கேட்டிருக்கிறார். ‘பத்திரிகை ஆசிரியருடன் கதைக்க வேண்டும்’ என்றிருக்கிறான்.
அவனை மாடிக்கழைத்து உட்கார வைத்து தேனீர் கொடுக்க, அவசரமாக மறுத்து விட்டான். இப்பொழுது இதையெல்லாம் குடித்துக் கொண்டிருக்க அவகாசமில்லை. வெளியில்ப் போன வீட்டுக்காரர்கள் திரும்புவதற்குள் சென்று விட வேண்டுமென அவசரப்பட்டுள்ளான்.
அவன் அன்று வந்த நோக்கம், ஈழநாதத்தில் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் விண்வெளி வினோதம் என்று வானியல் தொடர்பான ஒரு தொடர்கட்டுரை வெளியாகிக் கொண்டிருந்தது. அதனை விவியன் நமசிவாயம் எழுதி வந்தார். அவர் இலங்கை விஞ்ஞானிகள் சங்கத்திலுமிருந்தவர்.
அதற்கு முதல் வாரம் வந்த கட்டுரையில் ஒரு விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு. உண்மையில் இப்படி வர வேண்டுமென எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றானாம். பிறிதொரு தினத்தில் பத்திரிகை அலுவலகத்திற்கு விவியன் நமசிவாயம் வந்த சமயம் ராதேயன் கடிதத்தை கொடுத்திருக்கிறார். விவியன் நமசிவாயம் அசந்து போனார். அந்த விபரத்தை அவரே அப்பொழுதுதான் அறிந்திருக்கிறார். அந்தப்பையனை உடனடியாக காண வேண்டுமென விரும்பியிருக்கிறார். ஆனால் உடனடியாக அது சாத்தியமாகியிருக்கவில்லை.
அந்தப் பையன் கொடுத்துவிட்டு சென்ற முகவரிக்கு ஒருநாள் ராதேயன் அண்ணை சென்றிருக்கிறார். வீட்டில் விசாரித்த பொழுது, எல்லோரும் பயத்துடனும், சந்தேகத்துடனும் பார்த்திருக்கிறார்கள். பத்திரிகைகாரர்கள் என்று நம்ப வைத்த பின்னர்தான் அவனை சந்திக்க அனுமதித்திருக்கிறார்கள். இப்படியாக வீட்டிலேயே பலத்த கண்காணிப்பில் அவன் வைக்கப்பட்டிருந்தமைக்கு காரணமுமிருந்தது. கிடைத்த உபகரணங்களைக் கொண்டு தானே உருவாக்கிய தொலைநோக்கியொன்றை முகட்டு ஓடுகளை கழற்றிவிட்டு, அறையிலிருந்து பார்க்கத்தக்கதாக பொருத்தி வைத்திருந்தான். நேரகாலமில்லாமல் அந்த தொலைநோக்கியிலிருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். தவிரவும், தன் வயதுக்கு மீறிய அறிவுடனும் செயல்களுடனுமிருந்த அவனை பெற்றோரால் புரிந்து கொள்ளவே முடியாமலிருந்திருக்கிறது. அவற்றின் விளைவுகளினால் ஒரு முரண்பட்ட ஆளுமையாகவே அவர் உருவாகிக் கொண்டிருந்தார்.
இவ்வளவு பின்னணிகளையுமுடைய பையனை பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாக சொன்ன போது முதலில் வீட்டுக்காரர் மறுத்துவிட்டார்கள். ஒரு மணித்தியாலத்தில் அவரை பத்திரமாக ஒப்படைப்பதென்ற வாக்குறுதி கொடுத்த பின்னர்தான் அனுப்புவதற்கு சம்மதித்திருந்தார்கள். அதுவும் சகோதரர்களின் துணையுடன்.
அப்படி வந்த சமயத்தில் இன்னொரு அஸ்திரத்தையும் வீசி ஈழநாதகாரரை கலங்கடித்தான் அந்தப் பையன். இந்த முறை அஸ்திரம் ஒரு கடிதமாகயிருந்தது. ஆதர் சி. கிளார்க் அவனிற்கு எழுதிய கடிதம். ஒருமுறை ஆதர் சி கிளார்க்கினது கட்டுரையொன்றிலும் இப்படியேதோ பிழை கண்டுபிடித்திருந்தான். அவருக்கும் அது பெரிய ஆச்சரியமாகயிருந்திருக்கிறது. அவனது ஆற்றலைப் பாராட்டியதோடு, கொழும்பிற்கு வர நேர்ந்தால் தன்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பலத்த பிரயத்தனப்பட்டு அவனை ஈழநாதம் பத்திரிகைக்கு ராதேயன் அண்ணை கொண்டு வந்திருந்தார். தி.தவபாலன் என்ற அந்த பையன் ஈழநாதத்தின் சிறுவர் பகுதி ஆசிரியராக கடமையை பொறுப்பேற்றருந்தான். இதன் பின்னர், அந்தப் பையன் சினிமா நட்சத்திரத்தைப் போல ஈழத்தமிழர்களிடம் வேகமாக அறிமுகமாகிக் கொண்டிருந்தான். தமிழ்ச்சினிமா நாயகர்களை ஒத்ததாகவே அவனது பாத்திரமுமிருந்தது. நண்பர்களெனப்படுபவர்கள் அவனின் பின்பாக அணிதிரண்டனர். தவிர்த்தவர்களையெலலாம் எதிர்வரிசையில் விட்டு ஈவிரக்கமின்றித் தாக்கினான்.
****
தி.தவபாலன் என்றும் இறைவன் என்றும் மூச்சு விடாத மூர்க்கமான குரலொன்று புலிகளின்குரல் வானொலியில் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் செய்திஆய்வு, அரசியல் நிகழ்ச்சிகள் என வரையறுக்கப்பட்ட நேரத்தில் ஒலித்த குரல் படிப்படியாக பிற நிகழ்ச்சிகளையெல்லாம் தின்று தீர்க்கத் தொடங்கியது.
அடிப்படையில் அவர் வானியல்த்துறை சார்ந்த ஆர்வமும் அறிவுமுடையவர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறான அரசியல் சார்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். இயல்பிலேயே காரியங்களில் தீவிரவும், வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற வெறியும் நிறைந்திருந்தவர் அங்கும் மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கினார். அது சாதாரணமாக கிடைத்த இடமல்ல. அவரது அறிவினாலும், உழைப்பினாலும், நம்பிய இலட்சியம் மீதான அர்ப்பணிப்பினாலும் அந்த இடத்தை நோக்கி உயரத் தொடங்கினார்.
இப்படி அவரது குரல் வரையறையில்லாமல் ஒலிக்கத் தொடங்க, அவரது பெயர் ஊரெல்லாம் அடிபடத் தொடங்கியது. அந்த வானொலியிலிருந்து அவரளவிற்குப் பிரபலமான இன்னொருவரைக்காணமுடியாது. அவரது நிகழ்ச்சிகளில் அதிகம் சிக்கலான கோட்பாடுகளெதும் விவாதிக்கப்படவில்லை. ஆழமான அர்த்தத்தில் பிரச்சனைகள் அணுகப்படவில்லை. எல்லாமே வெளிப்படையான ஒன்றுதான். அதாவது, மக்களை அணிதிரட்டுவது. நிலவுகின்ற சூழலில் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களிற்கான நியாயங்களை கற்பிப்பதும், அதனை மக்களிடம் கொண்டு செல்வதுமே அவரது பணிகளாகயிருந்தன. அதற்காக அவர் எதனையும் சொல்லத் தயாராகயிருந்தார்.
.
வன்னி வானொலித்துறையில் அவருக்கென தவிர்க்கமுடியாத அடையாளமிருக்கிறது. ஏனெனில் அந்த வானொலியை அவர்தான் வளர்த்தெடுத்திருந்தார். புதிய புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கினார். இதில் முக்கியமானது ‘ஆனா மூனா’ என்றொரு நிகழ்ச்சி. புலிகளின்குரல் அலைவரிசையின் வீச்செல்லைக்குட்பட்டிருந்தவர்கள் வயது, பால் வேறுபாடின்றி இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்களாகயிருந்தனர். ஒரு அறிவாளியையும் ஒரு முட்டாளையும் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு புதிய தொழில்நுட்ப தகவலை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சுவாரஸ்யமான கதையின் முடிவைப்போல ஒவ்வொரு வாரமும் முட்டாள்ப்பையன் நகைச்சுவையான விபத்துக்களில் மாட்டுப்படுவதாக நிகழ்ச்சி முடிவடைந்தது. இரவு எட்டு இருபதிற்கு இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் சமயங்களில் வானொலிப்பெட்டிகளின் முன்பாக சனங்கள் கூட்டம்கூட்டமாக நிற்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.
தமிழ்வானொலி வரலாற்றிலேயே இல்லாதவாறான சில புதுமைகளையும் அவர் செய்திருக்கிறார். யுத்தகளங்களிற்கு போராளிகளை அனுப்பிவிட்டு வெற்றிச் செய்திகளிற்காக காத்திருந்த காலகட்டத்தில் அவர் அந்த நிலையையும் மாற்றினார். இதற்கு முன்னர் கிரிக்கெட், களியாட்டங்கள், இன்னும் எதையெதையோ எல்லாம் நேரடி ஒலிபரப்பாக கேட்டிருந்தோம். அவர்தான் தமிழ்வரலாற்றிலேயே யுத்தகளங்களை நேரடி ஒலிபரப்புச் செய்தார். ஓயாதஅலைகள் மூன்று நடவடிக்கையில் அவர் களத்தில் போராளிகளுடனிருந்தார். சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் போய், அங்கிருந்தபடியே யுத்தகள நிலவரங்களை வானொலியில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெயசிக்குறு நடவடிக்கையில் கைப்பற்றிய இடங்களையெல்லாம் விட்டுவிட்டு படையினர் ஓடிக்கொண்டிருந்த பொழுது அவரும் படைகளை மைக்குடன் துரத்திக் கொண்டிருந்தார். இதனால் என்ன நேர்ந்ததெனில், புதிதாக ஒரு இடம் கைப்பற்றப்பட்ட பொழுது, அந்த விடயம் கட்டளைத்தளபதிகளிற்குத் தெரிய முன்னார் வானொலியூடாக சனங்களிற்குத் தெரிந்தது.
ஒரு கட்டத்தில் அந்த வானொலி நிலையத்தின் தீர்மானமெடுக்கும் சக்திமிக்கவராக அவர் உருவெடுத்திருந்தார். அவரது தலைமையின் கீழ் பல விடுதலைப்புலியுறுப்பினர்கள் கூட பணியாற்றினார்கள். வானொலியின் செல்நெறியை தீர்மானிக்கும் ஒருவராகவுமிருந்தார். இந்த நாட்களில் அவர் ஒரு முழுமையான போராளியாகினார்.
காலை ஒளிபரப்பு ஆறுமணிக்கு ஆரம்பமாகினால், ஆறுமணி பத்து நிமிடத்திற்கெல்லாம் ஒலிவாங்கியைப் பொறுப்பெடுக்கத் தொடங்கினார். வேவ்வேறு தலைப்புக்களிலான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்திக் கொண்டிருந்தார். அவரது இயல்பான மூர்க்கம் எல்லா நிகழ்ச்சிகளிலுமிருந்தது. அப்பொழுது இராணுவம் மன்னாரிலிருந்து முன்னேற ஆரம்பித்து விட்டது. அந்த நாட்களில் ஒரு பொறி பற்றிய நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார். அதற்குத் தானே ஸ்ராலின்கிராட்டிலிருந்து ஜெயசிக்குறு வரை உதாரணங்களிருந்தன. வரலாறெனப்படுவது ஒரே மாதிரியாகவே திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒன்றென மூர்க்கமாக நிறுவ முயன்று கொண்டிருந்தார். சனங்களும் அவர் சொல்வதெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘அகலக்கால் பதிக்கும் சிங்களம்’ என்ற வார்த்தையை ஒரே நாளில் பலதடவைகள் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். உங்களிற்கான சவக்குழிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இராணுவமே திரும்பிப் போய்விடு என இராணுவத்திற்கும் ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.
இதில் குறிப்பிடத்தக்கதான இன்னொரு விடயமுமுண்டு. களத்திலிருக்கும் போராளிகளில் பெரும்பாலனவர்கள் அவரது இரசிகர்களாகயிருந்திருக்கிறார்கள். அவர்களையும் உற்சாகப்படுத்துவது அவரது பிரதான பணிகளில் ஒன்றாகயிருந்தது.
விடுதலைப்புலிகள் பற்றிய பொதுவான பிம்பத்தின் மொத்த உருவமாகயிருந்தார் என்று சொன்னால்க்கூட தவறில்லை. ஏனெனில், அவரிடம் சமரசங்களோ, தேர்வுகளிற்கான வாய்ப்புகளோ இருந்திருக்கவில்லை. ஈழத்தமிழர்களெனப்படுபவர்கள் ஒன்றில் தியாகிகளாகயிருக்க வேண்டும். அல்லது துரோகிகளாகயிருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இரண்டும் கெட்டானாக ஒருவன் இருக்க முடியாது. ‘சொரணை கெட்டவர்கள்’ என வெளிப்படையாகவே திட்டினார். அவர் ஈவிரக்கமற்ற வானலை யுத்தக்காரனாகயிருந்தார். தியாகிகளைத் தவிர்த்து மிகுதியனைவருக்கும்- ஒருவரைக்கூட தப்பவிடாமல்- தன் சொற்களினால் மரணதண்டனை நிறைவேற்றிக் கொண்ருந்தார். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. டக்ளஸ் தேவானந்தாவில் தொடங்கி இயக்கத்தை விட்டு ஓடிப்போன பொடியன் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.
ஓவ்வொரு தமிழனும் பிறந்தது, போராடி தனிநாட்டையடையவே என்பது மாதிரியானதொரு எண்ணம் அவரிடம் இருந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது மாதிரியானதொரு சித்திரத்தையே தன் வாழ்நாள் முழுவதும் வரைந்து கொண்டிருந்தார்.
குறிப்பாக யுத்தம் துரத்தத் தொடங்க, அவரது மூர்க்கமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. வானொலியை கேட்கும் யாருக்குமே அது தெளிவாகப் புரிந்திருக்கும். சனங்கள் ஊர் ஊராக இடம்பெயர அவரும் வானொலி நிலையத்துடன் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருந்தார். இதற்கு வசதியாக ஒரு கொன்டெயினர்ப் பெட்டியில் வானொலி நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. சமயங்களில் இடம்பெயர்ந்து ஓடிக் கொண்டிருந்த பொழுதும் அவர் சனங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். தனது ஒலிபரப்பு வாகனமும் அகதியாகச் சென்று கொண்டிருப்பதாக ஒருமுறை குறிப்பிட்டுச் சிரித்தார். இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே அவர் வானொலியில் சிரித்து நான் கேட்டிருக்கிறேன்.
மன்னாரில் நடவடிக்கையை தொடங்கிய 58வது டிவிசன் படையினர், தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருப்பதாக ஒரு பிம்பம் பரவலாக உருவாகிக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளினால் அந்த டிவிசனை சமாளிக்கவே முடியாதென்ற எண்ணம் சாதாரண சனங்கள் மத்தியில்க்கூட எற்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமுமிருந்தது. புலிகளின் எல்லா நட்சத்திரத் தளபதிகளும் முயன்று பார்த்தும் அந்த டிவிசனது வியூகங்களை உடைக்க முடியாமலிருந்தது. யுத்த வரலாற்றிலேயே அந்த டிவிசன்தான் அதிக எண்ணிக்கையான புலிகளைக் கொன்றதாக, கொழும்பு ஆங்கிலப்பத்திரிகைகள் படைத்துறைக் கட்டுரைகளில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இராணுவ தந்திரங்களில் கைதேர்ந்த இயக்கமெனச் சொல்லப்பட்ட புலிகளினாலேயே சமாளிக்க முடியாமலிருந்த 58வது டிவிசனை எதிர்க்க இதற்குப் பின்னர்தான் அவர் களமிறங்கினார். அவர்கள் கனரக ஆயுதங்களுடன் களத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, இவர் அவர்களுடன் சொற்களினால் மோத ஆரம்பித்தார். அந்த டிவிசன் சந்தித்த இழப்புக்கள், அவர்களினால் தாக்குப்பிடிக்கக் கூடிய காலஎல்லை, அதனை நிறைவேற்ற தேவையான இளைஞர் யுவதிகள் என இவரும் ஒரு புள்ளி விபரத்துடன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் தனது நிகழ்ச்சி முழுவதையும் 58வது டிவிசனை தாக்குவதற்காகவே ஒதுக்கினார்.
இதில் சுவாரஸ்யமான விசயமொன்றுண்டு. புலிகளின் தோல்வி குறித்து கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகை செய்திகளையும் வானொலியில் வாசித்தபடியிருந்தார். யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை திவயின போன்ற சிங்களப்பத்திரிகைகளில் வந்த செய்திகளையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தார்.
யுத்தத்தின் இறுதி நாட்களில், இது முடிவல்ல. ஒரு யுகப்புரட்சியின் ஆரம்பம். ஸ்ராலின் கிராட் மக்கள் போல் எழுவோம் என விடாமல் மூர்க்கமாக முழங்கிக் கொண்டேயிருந்தார். மே 16இல் கூட யுத்தத்தின் எந்த முனையிலும் பின்னடைவு ஏற்படவில்லை என நிறுவ முயன்று கொண்டிருந்தார். இது ஒரு சாராரை நிம்மதி கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. இன்னொரு சாரரை கொதிப்படைய வைத்துக் கொண்டிருந்தது. விளைவு என்னவெனில், அந்தச் சிறுதொகை மக்கள் கூட்டமே அவரை இரண்டு விதமாகப் பார்த்தார்கள். ஒரு தொகுதியினர் அவரை போற்றிப் புகழ்ந்து, கதாநாயகன் ஆக்கினார்கள். இன்னொரு தொகுதியினர் இகழ்ந்து பைத்தியக்காரன் என்றார்கள். அவர் இரண்டையும் பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். வாழ்ந்த காலம் முழுவதும் இப்படியாக ஒரு சிக்கலான ஆளுமையாகவே அவர் வாழ்ந்தார்.
தான் சரியென நம்பிய ஒரு குறிக்கோளை நோக்கி மற்றவர்களையும் அணிதிரட்டுவது தனது கடமையென அவர் எண்ணியிருக்கக் கூடும். இதனால் அவர் கதாநாயகனாகவும், பைத்தியக்காரனாகவும் வாழ வேண்டியிருந்தது.
இறுதியில் அவர் நம்பிய குறிக்கோள் தோல்வியடைந்தது. மே 18இல் எல்லாமும் முடிந்த பொழுது அங்கிருந்தவர்களிற்கு இரண்டு தெரிவுகளிருந்தன. ஒன்றில் சரணடைவது. அல்லது சாவது. பலர் முன்னதை தேர்வு செய்தனர். சிலரைப்போல, அவர் பின்னதைத் தேர்வு செய்தார்.
****
உலக ஊடக சுதந்திரத்தை முன்னிட்டு, சுதந்திர ஊடகக்குரல் என்ற அமைப்பினர் கடந்த மே மாதம் மூன்றாம்; திகதி ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தனர். அதில் தி.தவபாலனிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. அவர் இறந்ததின் பின்பாக அவரது படம் வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றே நினைக்கிறேன்.
சுதந்திர ஊடகக்குரல் நிறுவனம் பெரும்பாலும் உதயன் பத்திரிகையாளர்களைக் கொண்டது. சரவணபவனது நிறுவனமது. ஊடகவியல் அமைப்புக்களிற்கு அரசு கொடுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள இப்படியொரு அமைப்பை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறென். ஏனெனில் அந்த அமைப்பை ஸ்தாபிக்கும் பொழுது அவர்கள் வேறொரு பெயரிலேயே இயங்க இருந்தார்கள். ‘பிஸ்னஸ் ரூட்’ தெரிந்த பெரும்பாலான தேசியவாதிகளைப் போல அவர்கள் தேசிய, சுயநிர்ணய, தன்னாட்சி போன்ற ‘கிக்’ ஏத்தும் வசனங்களில் ஒன்றை அந்தப்பெயரில் சேர்த்திருந்தார்கள். ஆனால் ஊடக அமைச்சர், இப்படி பெயர் வைத்தால் காசு தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்ததினால், யாருக்கும் நோகாமல் ‘சுதந்திர’ என்ற சொல்லை மட்டும் வைத்துக் கொண்டுவிட்டார்கள்.
தமிழர்களின் தேசியத் தலைவர்களில் அனேகமானவர்கள் இந்த நிகழ்விற்கு நிதியளித்திருக்கிறார்கள். அந்தப்பட்டியல் மிக நீண்டது. அதுபற்றிய செய்திகளும், புகைப்படங்களும் ஏற்கனவே வேண்டிய அளவிற்கு ஊடகங்களில் வெளிவந்துவிட்டன.
அதிலும் குறிப்பிடத்தக்கதான நிகழ்ச்சி தவபாலனது படத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வவனியா, கிளிநொச்சி அமைப்பாளர் கீதாஞ்சலி மாலையணிவித்து அஞ்சலி செலுத்தியமை. வன்னியில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரான சத்தியமூர்த்திக்கும் அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. அதற்கு யார் மாலையணிவித்தார்கள் என்பது தெரியவில்லை. வன்னி யுத்தத்தில் தீவிரமாக பங்காற்றிய யாராவது இராணுவ அதிகாரியாகவுமிருக்கலாம்.
தவபாலன் எப்பொழுதும் மூர்க்கமாக வானொலிப் பெட்டியில் சொல்லிக் கொண்டிருந்தார்- இந்தச் சிறு தீவு இரண்டு நாடுகளாலாக வேண்டியது என. ஏன்றேனுமொருநாள் அது சாத்தியமாகுமென அவர் அதனை நம்பிக் கொண்டுமிருந்தார். அதற்காக வாழ்ந்து கொண்டுமிருந்தார். அந்த நம்பிக்கை பொய்த்து, அவர் எதிரியாகக் கருதியவர்கள் வெற்றி பெற்ற பொழுது, அவர்களிடம் அவர் சரணடையவில்லை. எல்லோரையும் போல அவரின் முன்பாகவும் குறைந்தது இரண்டு தெரிவுகளாவது இருந்தன. வானலைகளில் அவர் வரைந்த சித்திரங்களில் மட்டும்தான் தேர்வுகளற்ற கறாரான பார்வைகள் இருந்தன எனச் சொல்ல முடியாது. தனது வாழ்க்கையிலும், மரணத்திலும் அதனை அவர் செயற்படுத்திக்காட்டினார்.
ஆனாலும் அவர் இறந்துவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினர் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவுவில்லை. அவரது மரணச்சான்றிதழிற்குக்கூட விண்ணப்pக்கவில்லை. அவர் என்றேனுமொரு நாள் திரும்பி வரக்கூடுமென காத்திருக்கும் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களில் ஒருவராகவே அவரது மனைவியிருக்கிறார்.
ஆனாலும், இப்பொழுது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இனி அவரது மரணச்சான்றிதழிற்கு குடும்பத்தினரும் விண்ணப்பிக்கக்கூடும். அவர் நிச்சயம் இறந்துவிட்டார். மே18 இல் அவர் தப்பித்திருந்தாலும், மூன்று வருடங்கள் கழித்து யாழ்நகரின் மத்தியில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.
****
நன்றி: பொங்குதமிழ் இணையம்
கர்ணனை வாசித்தல்- நிலாந்தன்
நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின் வன்னியால் வந்தவர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சைக்குள்ளான வர்களில் ஒருவர் யோ. கர்ணன். வன்னியால் வந்தவர்கள் 3 வகைப்படுவர்.
1. தப்பிவந்தவர்கள்
2. சரணடைந்தவர்கள்
3. கைதுசெய்யப்பட்டவர்கள்
என்ற இந்த மூன்றையும் இன்னும் சுருக்கிக் கூறின் கைதிகளும் அகதிகளும் எனலாம். இவ்விதம் கைது செய்யப்பட்டவர்களுள் பலர் சர்ச்சைக்குள்ளாயினர். அங்கே நிற்கிறார்கள். இங்கே நிற்கிறார்கள். ‘ஏயார்போட்டில் நிற்கிறார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் அவர்களில் எவருமே திரும்பி வரவில்லை.
கர்ணன் ஒரு திரும்பிவந்தவர். அதாவது கைதுசெய்யப்பட்டு அல்லது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர். திரும்பிவந்தவர்களில் அதிகம் பிரபலமடைந்தவரும் அவரே. அதிகம் சர்ச்சைக்குள்ளானவரும் அவரே. எனவேஇ ஒரு கலை இலக்கிய ஆளுமையாக ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் அவருடைய ஸ்தானம் எது என்பதைக் குறித்தும் யுத்த சாட்சியத்தைப் பொறுத்தவரை அவருடைய ஸ்தானம் எந்தகையது என்பது குறித்தும் நானிங்கு பேச விளைகிறேன். அதாவது, கர்ணனை விளங்கிக் கொள்ளல்.
மகாபாரதத்தில் வரும் கர்ணன் அங்கீகாரத்திற்கும் அங்கீகாரமின்மைக்குமிடையே தத்தளிக்கும் ஒரு பாத்திரம். மரணநேரத்திற்தான் அவருக்கு விஸ்வரூபதர்சனமும் கிடைத்தது. அங்கீகாரமும் கிடைத்தது. திரு. பிரபாகரனுக்கு மிகப்பிடித்த ஒரு புராணபாத்திரம் கர்ணன். நமது யோ.கர்ணனும் அங்கீகாரத்துக்கும் நிராகரிப்புக்கும் இடையே நிற்கிறார். எனவே அவரை விளங்கிக்கொள்வது என்பது அதன் மிக ஆழமான அர்த்தத்தில் அதாவது கலை இலக்கிய அரசியல் மற்றும் உளவியல் அர்த்தங்களில் செய்யப்படவேண்டும்.
கர்ணணை இரண்டு தளங்களில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒன்று ஒரு கதை சொல்லியாக அவர் யாராக இருக்கிறார் என்பது. அதாவது அவர் எத்தகைய ஒரு கதைசொல்லி என்பது. இரண்டுஇ அவர் கதை சொன்ன காலகட்டம் எதுவென்பது. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர் கதைசொன்ன காலகட்டத்தின் உளவியல் எத்தகையது என்பதும்இ அந்த உளவியல் அவர்சொன்ன கதைகளை எவ்விதம் எதிர்கொண்டது என்பது பற்றியதும். மேற்சொன்ன இரண்டு தளங்களினூடாகவும் நாம் கர்ணனை விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.
முதலாவதாக கர்ணன் எத்தகைய ஒரு கதைசொல்லி என்பது. எள்ளல்தான் அவருடைய பிரதான பலம். எள்ளல்தான் அவருக்குப் பகைவர்களையும் பெற்றுக்கொடுக்கிறது. எள்ளலைக் கழித்துப் பார்த்தால் கர்ணன் என்ற கதை சொல்லியின் படம் மங்கலாகவே கிடைக்கும்.
ஈழத்துப் போரிலக்கியப்பரப்பில் எள்ளலுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் இல்லை. எல்லாமேஇ ‘சீரியஸ்’ தான். ஒரு சிறிய இனம்இ தனது வலிமைக்கு மீறி பெரும் செயல்களைச் செய்யமுற்பட்டதால் ஈழத்துப்போர்ப்பரப்பில்; எல்லாமும் சிரியஸ் ஆகிவிட்டது. அங்கே அழுவதற்கும் நேரமிருக்கவில்லை. சிரிப்பதற்கும் நேரமிருக்கவில்லை. இது காரணமாகவும் ஒற்றைப்பரிமாண அரசியல் காரணமாகவும் ஈழப்போர்இ ஒரு செழிப்பான காட்டூன் பாரம்பரியத்தை உருவாக்கத்தவறிவிட்டது. எமது சிறுபராயப்பாடப்புத்தகங்களில் ‘சிரிக்கத்தெரிந்த பாரசீகரைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய சிரிப்பு நரம்புகள் எங்கேயோ அறுந்துபோய்வி;ட்டன. சிரித்திரன் சுந்தருக்குப்பின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் எள்ளற் பாரம்பரியத்தை உருவாக்க முடியாது போயிற்று.
இத்தகைய ஒரு பின்னணியில் உமாவரதராஜன், சோபாசக்தி, கர்ணன் போன்று மிக அரிதாகவே எள்ளலுடன் கூடிய கதை சொல்லிகளைக் காணமுடிகிறது.
கர்ணனுடைய எள்ளல்தான் அவருடைய மொழியைத் தீர்மானிக்கிறது. கதைசொல்லும் முறைமையைத் தீர்மானிக்கிறது. பாத்திர உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது. அவருடைய கதைகளில் இடையிடையே வந்து கலக்கும் தமிழாக மருவிய ஆங்கிலச் சொற்களைத் தீர்மானிக்கிறது. அவர் எள்ளலோடு கொடுமைகளைச் சிரித்துக்கடக்கிறார். அல்லது அவற்றைச் சிரிப்பாக்கிவிட்டுக் கடந்துபோகிறார். எதையும் எள்ளிநகையாடும் ஒரு கதை சொல்லியாக அவர் ஒரு வீரயுகத்தின் பாடுபொருட்களையும் திருச்சொரூபங்களையும் கரிக்கேச்சர் செய்கிறார். இத்தகைய அர்த்தத்திற் கூறின் நான் அவரை சொற்களாற் காட்டூன் வரைபவர் என்பேன். ஒரு வீரயுகத்தின் எந்தப் புனிதங்களும் விழுமியங்களும் திருச்சொரூபங்களும் தனது எள்ளற் பரப்புக்கு வெளியில் இல்லை என்று கூறமுற்படும் அவர்இ தேவதைகளுக்கும் தீட்டுவரும்இ அந்தத்தீட்டுத்துணியும் நாற்றமெடுக்கும் என்று கூறும்போது ஒரு வீரயுகத்தின் புனிதபடிமங்கள் எள்ளலுக்குள்ளாகின்றன. இது அந்தத் தேவதைகளைத் துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது.
இங்கேதான் கர்ணனின் எள்ளல் பகையைச் சம்பாதிக்கிறது. அவருடய பலமே அவருடய எள்ளல்தான். ஆனால் அதுதான் அவருக்குப் பகைவர்களைப் பெற்றுக்கொடுக்கிறது.
தேவர், அசுரர், கதாநாயகன், வில்லன் போன்ற எமக்குப் பழக்கப்பட்ட நன்கு வாலாயமான கறுப்புவெள்ளைச் சிந்தனைக்கூடாகப் பார்க்கும்போது தேவர்கள் அல்லது யுகபுருசர்கள்இ அல்லது நாயகர்கள் போன்றோர் அப்பழுக்கற்ற தூய்மைவாதிகளாகவும் அல்லது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் அல்லது கருவிலேயே திருவுடையவர்களாகவும் தோன்றுவர். ஆனால் யதார்த்தத்தில் தேவதைகளுக்கும் தீட்டுவரும் இறைதூதர்களுக்கும் காயம் வரும். ரத்தம்வரும். மரணம்வரும்..
கர்ணன் இந்த யதார்த்தத்தைத்தான் சொல்ல வருகிறார். அவர் சொல்பவை ஒன்றில் உண்மைகள் அல்லது உண்மையின் வகைமாதிரிகள் அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகள்.
அவர் சொல்லும் சில கதைகளோடு எனக்கும் உடன்பாடில்லை. இத்தொகுப்பில் உள்ள “;தமிழ்க்கதையை தவிர்க்குமாறு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார். ஆனால் தொடர்பாடற்தடைகள் காரணமாக அந்தக் கதை பிரசுரத்துக்கு வந்துவிட்டதாக அவர் பின்னர் கூறினார்.
அவர் கூறும் சிலவற்றோடு நான் உடன்படவில்லைத்தான். ஆனால் அவற்றைச் சொல்ல அவருக்குள்ள உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதை எழுதட்டும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதில் தான் Diversity இருக்கும்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் ஒரு கதைசொல்லி கூறும் உண்மைகளும் சட்டப்பெறுமானம் உடைய யுத்தச் சாட்சியங்களும் ஒன்றா? என்று. ஒன்றில்லைத்தான். ஆனால் ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல “புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை” – கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை.
கர்ணனும் அவனைப் போன்றவர்களும் புனைவின் இழைகொண்டு உண்மைகளைக் கோர்ப்பவர்கள்தான்.
இவ்விதம் உண்மைகளைக் கோர்க்கும் ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியத்தில் ஆகப் பிந்திய எழுச்சிகளில் ஒருவராகக் கர்ணணும் காணப்படுகிறார். இந்தப் பாரம்பரியத்தின் தொடக்கமாக மு. தளையசிங்கம் காணப்படுகிறார். அவரை ஈழத்துப் போரிலக்கியத்தின் கட்டியக்காரன் எனலாம்.
தளையசிங்கம் 1960இல் எழுதிய ‘ஒரு தனிவீடு’ நாவல் 1958 கலவரத்தைப் பற்றியதாகும். நாவலின் இறுதிப் பகுதியில் ஓர் அண்டகிரவுண்ட் ஆயுதப் போராட்ட இயக்கம் பற்றியும்இ தனிநாடுபற்றியும் அல்லது தமிழகத்தோடு இணைந்த ஒரு பரந்த கூட்டாட்சி பற்றியும் கூறப்படுகிறது. இதில் ஒரு தீர்க்கதரிசனம் இருப்பதாக தான் நம்புவதாக தளையசிங்கம் பின்னாளிற் கூறியிருக்கிறார். மு. தளையசிங்கத்தின் இலக்கியக் கோட்பாடாகிய ‘மெய்யுள்’ இன்படி உண்மையே படைப்பின் உள்ளடக்கமாக இருக்கும். அதாவது Faction அல்லது Fictious Faction. இங்கு மு. தளையசிங்கம் உண்மை எனப்படுவதை அதன் மிக ஆழமான அர்த்தத்திற் பயன்படுத்தியிருக்கிறார். இனிவரும் காலத்தில் இலக்கியம் ‘மெய்யை’ உள்ளடக்கமாகக் கொண்ட ‘மெய்யுள்’ ஆக இருக்கும் என்று கூறும் மு. தளையசிங்கம்; அதற்கு முன்னுதாரணமாக ஜோன் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்துநாட்கள்’ என்ற படைப்பினை முன்வைக்கிறார். மேலும் ஹென்றி ஜசிமோ, ஜசக் ஜசிமோ, மற்றம் ஆதர் சி கிளார்க் போன்றோரின் விஞ்ஞான மெய்விபரப் புனைவுகளையும் அவர் மனதிற்கொண்டிருந்ததாக அறியமுடிகிறது.
மு. தளையசிங்கத்தின் காலத்தில் தென்னிலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான வன்முறைகளே இனத்துயராகக் காணப்பட்டன. ஆனால் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தது போல ஓர் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு தமிழ்மக்களின் இனத்துயர் எனப்படுவது ஒவ்வொரு கட்ட ஈழப்போரிலும் பெரிதாகிக் கொண்டே வந்தது.
தளையசிங்கத்தின் காலத்தில் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு நடந்தவைதான் கொடுமைகளாகக் கருதப்பட்டன. ஆனால் அதன்பின் யாழ்நூலக எரிப்பு அதைவிடக் கொடுமையானதாகக் காணப்பட்டது. அதற்குப் பின் இயக்கச்சண்டைகள் வந்தன. இடம்பெயர்வுகள் வந்தன. முஸ்லிம்களோடு மோதல் வந்தது. பின்வந்த கொடுமை முன்வந்த கொடுமையை விட பெரிதாக இருந்தது. பின்னர் 1995இல் பேரிடப்பெயர்வு வந்தது. ஒரு சமூகத்தின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வேர்களையறுத்து அதன் இருப்பையே குலைத்த அந்த இடப்பெயர்வு அதற்குமுன் நேர்ந்த எல்லாக் கொடுந்துன்பங்களை விடவும் பெரிதாக இருந்தது. அதன் பின் தொடர் இடப்பெயர்வுகள் (Multiple displacements) உண்டாயின. இத்தொடர் இடப்பெயர்வுகளில் இறுதியானதே நந்திக்கடல் வீழ்ச்சியாகும். அது ஈழப்போரில் அதற்குமுன் நிகழ்ந்த எல்லாக் கொடுமையான அனுபவங்களோடும் ஒப்பிடுகையில் ஆகப்பெரிய இனத்துயராக முடிந்தது. இனி இ;தைவிடப் பெரிய ஒரு கொடுந்துயர் வராது எனும் அளவிற்கு அது ஒரு யுகமுடிவின் பிரளய அனுபவமாக மாறியது. இனி ஈழத்தமிழருக்கு எத்தகைய பேரிடர் வந்தாலும் அதுஇ முள்ளிவாய்க்காலில் அனுபவித்த பிரளயத்துயரோடு ஒப்பிடுகையில் அற்பமானதாகவே தோன்றும்.
இத்தகைய ஓர் அனுபவப் பின்னணியை உடைய எந்தவோர் இனத்தினதும் படைப்பிலக்கியம் எனப்படுவது உண்மையைத்தான் அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். நிச்சயமாகக் கற்பனையை அல்ல. ஏனெனில் கற்பனையை விடவும் பயங்கரமான அல்லது கற்பனை செய்யமுடியாத அளவிற்குப் பயங்கரமான உண்மைகள் ஈழத்தமிழர்களிடம் உண்டு. எனவே ஈழத்துப் போரிலக்கியம் என்பது தளையசிங்கம் கனவுகண்டதுபோல உண்மையை உள்ளடக்கமாகக் கொண்ட ஒன்றாக எப்பொழுதோ எழுச்சிபெறத் தொடங்கிவிட்டது.
லங்காராணி யிலிருந்து இந்த பாரம்பரியத்தை; துலக்கமாக அடையாளங்காண முடியும். அதன் பின் செங்கை ஆழியானால் புனைபெயரில் எழுதப்பட்ட 24 மணிநேரம் என்ற படைப்பினைக் குறிப்பிடலாம். ஆதன் இலக்கியத்தரம் பற்றிய சர்ச்சைகளுக்கப்பால் அது அதிகபட்சம் உண்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. அதன்பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியோடு வெளிவந்த விடியலுக்கு முந்திய மரணங்கள் என்ற படைப்பைக் கூறமுடியும். இங்கு ஒரு நூதனமான தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டவேண்டும். மேற்படி படைப்பை எழுதியவர் மு. தளையசிங்கத்தின் அணியைச் சேர்ந்த சு. வில்வரத்தினத்தின் மருமகனாகிய பாலகணேசன் என்பவரே அது. அதன்பின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து நிறையப் படைப்புக்கள் வெளிவந்தன. இவற்றின் இலக்கியத் தகுதி பற்றிய விமர்சனங்களுக்கும் அப்பால் அவை உண்மையின் ஒரு பகுதியை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவை என்பதற்காக அவற்றை இங்கே குறிப்பிடவேண்டும்.
இந்தக் காலப் பகுதியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தும் ஈழப்போரில் ‘சகபயணிகள்’ என்று வர்ணிக்கத்தக்க படைப்பாளிகளும் எழுதினார்கள்.
இவை எல்லாவற்றையும் பற்றி நான் 2005இல் கிளிநொச்சியில் நிகழ்ந்த ஒரு புத்தக வெளியீட்டின்போது; மிகவிரிவாக ஓர் உரையாற்றினேன். இன்னொரு போர் முகம் என்ற நாவலின் மீதான நீண்ட மதிப்பீட்டுரையில் மேற்படி உண்மையை உள்ளடக்கமாகக் கொண்ட ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியம் குறித்து நான் உரையாற்றினேன்.
இந்தப் பாரம்பரியத்தில் ஓர் உடைவாக மற்றொரு புதிய கிளைப்பாரம்பரியத்தை கோவிந்தனின் புதியதோர் உலகம் உருவாக்கியது. கோவிந்தனில் தொடங்கி சோபாசக்தி, ஜீவமுரளி, சக்கரவர்த்தி, செழியன் இப்பொழுது கர்ணன் என்று இந்தக் கிளைமரபு நன்கு விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.
மு.தளையசிங்கம் மெய்யெனக்கருதியது அதிகமதிகம் ஆன்மிக அர்த்தத்தில்தான். என்றாலும் ஓர் ஆன்மீகச் செயற்பாட்டுக்காரர் என்ற அடிப்படையில் அவருடைய குறுகிய கால ஆயுட்காலத்தினுள் அதாவது 36 வயதுக்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கூடாக எமக்குக் கிடைக்கும் சித்திரத்தின் அடிப்படையிற் கூறின் அவருடைய ஆன்மிகம் எனப்படுவது நிச்சயமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றல்ல.
எனவேஇ ஒரு தனிவீட்டிலிருந்து தொடங்கி இடையில் நாலாங்கட்ட ஈழப்போரின்போது வன்னியில் எழுதப்பட்ட கவனிப்புக்குரிய ஆனால் சர்ச்சைக்குரியது என்பதால் பிரசுரத்திற்கு அனுமதிக்கப்படாத ஏணைப்பிறை நாவலும் உள்ளடங்கலாக சேகுவேரா இருந்த வீடு வரையிலுமான ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியம் எனப்படுவது அதிகமதிகம் உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும். அதாவது Faction தான் அல்லது புனைவின் நுண் இழைகொண்டு உண்மைகளைக் கோர்க்கும் ஓர் இலக்கியப் பாரம்பரியம் எனலாம்.
இந்தப் பாரம்பரியத்தின் ஆகப்பிந்திய எழுச்சியாக கர்ணனும் ஒரு தொகுதி உண்மைகளோடு அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகளோடு எங்களை நோக்கி வருகிறார்.
ஆனால் அவர் எள்ளலோடு ஒரு வீரயுகத்தின் பாடுபொருட்களையும் திருச்சொருபங்களையும் கரிக்கேச்சர் செய்யும்போதுதான் மிகச் சிக்கலானதும் அறிவினால் நிதானப்படுத்தக் கடினமானதும் அதிகமதிகம் உணர்ச்சிக் கொந்தளிப்பானதுமாகிய ஒர் உளவியற் பரப்பினுள் நுழைய நேரிடுகிறது.
இதை இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்வதென்றால் நான் இப்பேச்சின் தொடக்கத்திற் கூறியதுபோல கர்ணனை விளங்கிக் கொள்வதற்குரிய இரண்டாவது தளத்தினுட் பிரவேசிக்கவேண்டும். அதாவது கர்ணனின் கதைகளை எதிர்கொண்ட உளவியற் சூழல் எத்தகையது என்பது?
நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரான ஈழத்தமிழ் உளவியல் எனப்படுவது நான் ஏற்கனவே பொங்குதமிழ் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில்க் குறிப்பிட்டிருப்பதுபோல அதிகம் உணர்ச்சிக்கொந்தளிப்பானது சிக்கலானது. பல தள அடுக்குகளையுடையது.
நந்திக்கடலுக்குப்பின் ஈழத்தமிழ்சமூகத்தில் மூன்று உட்கூறுகள் காணப்படுகின்றன.
முதலாவதுஇ வன்னியால் வந்தவர்கள்.
இரண்டாவதுஇ வன்னிக்கு வெளியே இருந்தவர்கள்.
மூன்றாவதுஇ புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்
இங்குஇ வன்னிக்கு வெளியே வாழ்ந்தவர்கள் என்பது இறுதியுத்தத்திற்கு முன்பே ஸ்ரீலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துவிட்ட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைக் குறிக்கும்.
மேற்சொன்ன மூன்று பிரதான உட்கூறுகளினதும் ஒன்றுக்கொன்று சில விடயங்களில் ஒத்துப்போகின்ற அல்லது மாறுபடுகின்ற மனோநிலைகளின் கலவையாக உருவாகியதே நந்திக்கடலுக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலாகும். இதில் ஒவ்வொரு உட்கூறுக்கும் தனித்தனியான அனுபவத்தொகுப்புண்டு. நிலையான நலன்களுண்டு. அச்சங்களுண்டு. வேறு பிரச்சினைகளுண்டு.
வன்னியால் வந்தவர்களைப் பொறுத்தவரைஇ அவர்கள் ஒரு பிரளயத்தை வாழ்ந்து கடந்துவந்த மக்கள். போரிடும் இரண்டு தரப்புக்குமிடையே சான்ட்விச்சாக நசிபட்டவர்களே இதில் அதிகம். வாழ்க்கையின் அடிக்கட்டுமாணங்கள் அனைத்தும் தகர்ந்துபோன ஓர் நிலையில் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வன்னிக்கு வெளியே இருந்தவர்கள்இ குறிப்பாக மூதூர் சம்பூர் உள்ளடங்கலான உயர்பாதுகாப்பு வலயங்களால் அகதிகளானவர்கள் தவிரஇ ஏனைய எல்லோருக்கும் வாழ்க்கையின் அடிக்கட்டுமாணங்கள்இ வன்னி அகதிகளோடு ஒப்பிடுகையில் ஓரளவுக்கேணும் ஸ்திரமாக இருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரைஇ அவர்கள் ஒப்பீட்டளவில் நிதிப்பலத்தோடும் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய ஓர் சுதந்திரச் சூழலிலும் வாழ்கிறார்கள்.
வன்னிக்கு வெளியே வாழ்ந்தவர்களில் குறிப்பாக அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வாழ்ந்தவர்களில் ஒரு தொகுதியினர் வன்னி அரசியலோடு நேரடியான தொடர்புகளைக்கொண்டிருந்தகாரணத்தால் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போனார்கள் அல்லது கைதுசெய்யப்பட்டார்கள அல்லது துரத்தப்பட்டார்கள்;.மற்றொருதொகுதியினர் வன்னிக்குவெளியே வாழ்ந்த போதும் மனதால் வன்னிக்குள் வாழ்ந்தார்கள்.இவ்விரு தொகுதியினரையும் தவிர எனையபெரும்பாலானவர்கள்; நந்திக்கடல் வீழ்ச்சியை தொலைக்காட்சிகளிற் பார்த்தவர்கள்தான். இவர்கள் எல்லாருமே ஒரு யுகமுடிவை கையாலாகத் தனத்தோடும் பிரயோகிக்கவியலாக் கோபத்தோடும்இ குற்றவுணர்ச்சியோடும், இருபரிமாண அல்லது முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்கள்தான். நந்திக்கடற்கரையில் ஆடைகளின்றிக் கிடந்த அந்த உடல் ஏற்படுத்திய அதிர்ச்சிஇ துக்கம்இ அவமானம்இ இழப்புணர்வு போன்ற எல்லாவற்றினதும் கலப்பாயுருவான மிகக் கொந்தளிப்பான மனோநிலையோடு இவர்கள் காணப்படுகிறார்கள்.
ஒரு பிரளயத்தைஇ அதன் உயிர்ப்பரிமாணங்களோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கும் அதை முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்களுக்கும் இடையில் அனுபவ வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும். வன்னியால் வந்தவர்கள் எதையாவது சொல்லமுற்படும்போதுஇ அதை வன்னிக்கு வெளியே இருந்தவர்கள் எதிர்கொள்வதில் இந்த அனுபவ வேறுபாடுகளுக்கும் ஒரு பங்கிருக்கும்.
நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் நாடுஇ வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது. கொழும்பில் முன்னெப்பொழுதையும் விட பலமாகக் காணப்படும் கறுப்பு வெள்ளை அரசியலின் விளைவே இது எனலாம். கொழும்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும் ஒரு நிலை உள்ளவரை அதன் விளைவாக உருவான யுத்தவெற்றி வாதம் தென்னிலங்கையில் வெகுசனமயப்பட்ட ஒரு நிலை உள்ளவரைஇ நந்திக்கடல்த் தோல்விக்குப் பின்னரான தமிழ்மக்களின் கொந்தளிப்பான உளவியலில் மாற்றமேற்பட வாய்ப்பில்லை. இத்தகைய ஒரு கொந்தளிப்பான உளவியலோடு கர்ணனின் எள்ளலை எதிர்கொள்வதே இங்குள்ள பிரச்சினை.
ஆனால்இ கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடுஇ அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழுகதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல. எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கைமட்டுமல்ல. இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது. இப்படிப்பார்த்தால்இ இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராகத் தன்னை வெளிப்படுத்த முற்படுவதன் மூலம் தான் எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக நிறுவ முற்படுகிறார்.
அதாவது ரிஸ்க் எடுக்கிறார். முன்னரும் ரிஸ்க் எடுத்தவர். ஒரு காலைக் கொடுத்தவர். இப்பொழுது மறுபடியும் ரிஸ்க் எடுக்கிறார்.
நந்திக்கடல் வீழ்ச்சிக்குமுன் பேசப்படாத உண்மைகளை அல்லது வன்னியில் பேச முடியாதிருந்த உண்மைகளை கர்ணன் அதிகம் பேசுகிறார். ஆனால் நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரான ஓர் அரசியல் மற்றும் உளவியற் சூழலில் அந்த உண்மைகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் பிரச்சினைகள் அல்லது மனத்தடைகளே கர்ணனை விளங்கிக் கொள்வதிலுள்ள மனத்தடைகளுமாகும். இங்கு பிரச்சினை என்னவென்றால் கர்ணன் சொல்வது உண்மையா இல்லையா என்பதல்ல. அவர் அதைச் சொல்லும் காலம் பொருத்தமா இல்லையா என்பதுமல்ல. அவரை எதிர்கொள்ளும் தோல்விக்குப் பின்னரான உளவியல் எனப்படுவது சரியா பிழையா என்பதுமல்ல. மாறாக கர்ணன் சொல்லும் கதைகளையும் அதை எதிர்கொள்ளும் தோல்விக்குப்பின்னரான உளவியலையும் எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்ப்பதுதான இங்குள்ள பிரச்சினை. உண்மையில் அவை இருவேறு எதிரெதிர் யதார்த்தங்களல்ல.மாறாக அவை ஒரு முழுமையான யதார்த்தத்தின் இருவேறு கூறுகளே. அவற்றை எதிரெதிராக வைத்துப்பார்ப்பது என்பதே ஒருவகைக் கறுப்பு வெள்ளை நோக்குநிலைதான். கர்ணன் சொல்லும் கதைகள் ஒரு யதார்த்தம். அதை எதிர்கொள்ளும் உளவியல் மற்றொரு யதார்த்தம். இரண்டுமே ஒரு முழுமையை உருவாக்கும் இருவேறு யதார்த்த மூலக்கூறுகள்தான்.
இந்த யதார்த்தத்தை தரிசிக்க முடியாதிருப்பவர்களுக்கு நான் ஓர்; அழைப்பை விடுக்கிறேன். தயவு செய்து வன்னிக்குப் போங்கள். நீங்கள் கொழுப்புக்குப் போகும்போதோ அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போதோ கடந்துபோகும் வன்னிக்கு அல்ல. கண்டிவீதி வழியே நீங்கள் காண்பது ஒரு ஷோக்கேஸ் பீஸ் மட்டும்தான். கண்டிவீதி இப்பொழுது ஒரு காட்சியறை. முன்பு ரணில் – பிரபா – ஒப்பந்த காலத்திலும் அது ஒரு காட்சியறையாக இருந்தது. அது அப்பொழுது சமாதானத்தின் காட்சியறை. இப்பொழுதும் அது யுத்த வெற்றிவாதத்தின் காட்சியறை. காட்சியறைகளிற்குள் இதயம் இருப்பதில்லை. வன்னியின் இதயம் அதன் ஆழத்தே ரத்தச்சோகை பிடித்த குள மையக் குடியிருப்புக்களிற்குள் இருக்கிறது. அதன் கிறவற்சாலைகள். கலிங்குகள். குளக்கட்டுக்கள் மற்றம் அறுத்தோடிகளின் வழியே செல்லும்போதுதான் வன்னியின் இதயத்தைக் கண்டுபிடிப்பீர்கள்.
நீங்கள் எந்தவிதமான முன்கற்பிதங்கள் இன்றியும்இ அரசியல் உள்நோக்கம் இன்றியும் இதயத்தாற் தேடுவீர்களானால் அது உங்களுக்குப் புலப்படத் தொடங்கும்.
ஒருபோக மழையினால் மட்டும் கழுவிச் செல்லப்பட முடியாத ரத்தமும் சாம்பலும் படிந்த அந்த கிறவற் சாலைகளின் வழியே வாருங்கள். ஒரு வீரயுகத்தின்; பொன்னிறமான நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும் காட்டுக் கூறுகளினூடாக வாருங்கள்.
குடும்பத்தின் தலைப்பிள்ளையை சாகக்கொடுத்துவிட்டு அல்லது தொலைத்துவிட்டு அல்லது பிள்ளை திரும்பிவரும் என்று யாரோ ஒரு குறிசொல்லி அல்லது கலையாடி கூறியதை நம்பிக் காத்திருக்கும் பெற்றோரோடு கதையுங்கள். அல்லது கையைக் காலைக்கொடுத்துவிட்டு அல்லது வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுகச் சேமித்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தத்தளிக்கும் யாரோடாவது கதையுங்கள்.அப்பொழுது அவர்களுடைய கண்ணீரின் சூட்டையும் இப்பொழுதும் தணியாது எரியும் ஒரு தேசிய நெருப்பின் சூட்டையும் ஒரு சேர ஸ்பரிசிப்பீர்கள்.
அப்பொழுதுதான் உங்களுக்குத் தெரியவரும் கர்ணன் சொல்லும்கதைகளும் அவரை எதிர்கொள்ளும் வீழ்ச்சிக்குப் பின்னரனான உளவியலும் ஒன்றுக்கொன்று எதிரான யதார்த்தங்கள் அல்ல என்பது. மாறாக அவை ஒரு முழுமையான தேசிய யதார்த்தத்தின் இறுவேறு தவிர்க்கப்படவியலாத கூறுகளே என்பது.
(‘சேகுவேரா இருந்தவீடு’ நூல்வெளியீட்டு விழாவில் நிலாந்தன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)
யோ.கர்ணனின் சிறுகதைத் தொகுப்பு-சேகுவேரா இருந்த வீடு: ஒவ்வொரு வரியும் வரலாறாக….
யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்இமொழி நடைஇஉத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.13 கதைகளை ஒரே மூச்சில் யாரும் வாசித்துவிட முடியாது.ஒரு கதையை வாசித்துவிட்டு அடுத்த கதைக்குப் போவதற்கு முன் இடைவெளியும் ஒருவித மௌனமும் வாசிப்பைத்தொடர்வதற்கான ஒரு மனத்தயாரிப்பும் தேவைப்பட்டது எனக்கு.ஆகவே இரண்டு மூன்று தினங்களாயின வாசித்து முடிக்க.
நேரடியாக வாசகரோடு பேசும் கதைகள் இவை.வாசகர் என்கிற ஹோதாவை சும்மா ஒரு இதுக்கு வைத்துக்கொண்டு இந்த உலகத்தோடு பேசும் கதைகள் இவை.உலகத்தோடு மட்டுமல்ல இக்கதைகள் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தனி மொழிகளாகவும் பாவ மன்னிப்புக்கோரும் மன்றாட்டுக் குரலாகவும் வரலாற்றைப் பகடி செய்யும் உக்கிரமான பேச்சாகவும் பன்முகப் பரிமாணம் கொண்டு அமைந்துள்ளன. இயக்கங்கள் இலட்சியங்கள்இகொள்கைகள்இ பிரச்சாரங்கள்இ கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன. நமக்குள் கேள்விகளை எழுப்புகின்றன.ஈழத்தில் நடந்துள்ள- இன்னும் தொடர்கின்ற – மானுட அவலத்தை முன் வைத்து வாழ்வின் சகலத்தின் முகத்தின் மீதும் தண்ணீரை வாரி வாரி இறைக்கின்றன.ஒவ்வொரு முறையும் நாம் சில்லிட்டுச் சிலிர்க்க நேர்கிறது.
திரும்பி வந்தவன் என்கிற கதையை இங்கு தமிழ் மானம் பேசுவோர் வாசித்தால் என்ன கதிக்கு ஆளாவார்களோ தெரியாது. இதை ஒரு குறிப்பிட்ட இயக்கத்து ஆள் பற்றிய கதை என்று பாராமல் பரத்தமை பற்றிய இன்னும் குறிப்பாகத் தமிழ்ப்பரத்தமை பற்றிய வரலாற்றுப் பார்வையுடன் இக்கதையை வாசித்தால் “ தமிழ் நளினங்களுடனும் தமிழ்ப்பவ்வியங்களுடனும் தமிழ் வெட்கத்துடனும் வரப்போறவள்…” என்கிற வார்த்தைகளில் புதைந்திருக்கும் பகடியின் வீச்சு நம்மைத் தமிழ் மூர்க்கத்துடன் தாக்கும். “ இப்படி இந்த வேலை செய்யிறாவெண்டு எங்கட அம்மாவை நீங்கள்தான் சுட்டனீங்கள்…. “என்கிற கடைசி வரி மரண தண்டனைக்கு எதிராக ஆவேசமான குரல் உலகெங்கும் எழும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத்தில் விடுதலைக்கான இயக்கங்களின் கைகளால் நிறைவேற்றப்பட்ட கொலைத்தண்டனைகள் பற்றிய ஞாபகத்தை வரலாற்றிலிருந்து உருவிப்போடுகிறது.
பசியின் நெருப்பில் பொசிந்துபோகும் விழுமியங்களை தமிழ்க்கதை பேசுகிறது என்று ஒருவரி சம்பிரதாயமாக தமிழ்க்கதை பற்றி எழுதிவிட முடியவில்லை.வாழ்வும் வரலாறும் புனைவும் பிரித்தரிய முடியாதபடி பின்னிக்கிடக்கும் கதை இது. இடப்பெயர்வுகளுக்கூடான அன்றாட வாழ்க்கையில் மலசலம் கழிக்கப் பெண்கள் பட்ட பாட்டைப் பற்றிய வரிகளை வாசித்தபோது செயலற்றுக் கைகால் விளங்காமல் போனதுபோல என் உடம்பே தளர்ந்து போனது.என்ன மாதிரியான நாட்களை நம் பெண்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.சிறு வயதில் வாசித்த கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு உடல் ரீதியாக என்னைத் தாக்கிய கதை.
கு.அழகிரிசாமி இரண்டு ஆண்கள் என்று ஒரு கதையும் தொடர்ந்து இரண்டு பெண்கள் என்றொரு கதையும் எழுதினார்.யோ.கர்ணன் திரும்பி வந்தவன் கதையை அடுத்து திரும்பி வந்தவள் என்றொரு கதை எழுதியிருக்கிறார்.ஈழத்தில் இந்த இரு வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு.வலி பொதிந்த அர்த்தங்கள்.போர்க்காலம் முழுக்க வெளி நாட்டிலிருந்துவிட்டு திரும்பி வந்தவர்.இடையிலே போய் இப்போது திரும்பி வந்தவர்இஇயக்கத்துக்குப் போய் திரும்பி வந்தவர்இசிங்கள ராணுவத்தால் பிடிக்கப்பட்டு நீண்ட நாட்களின் பின் திரும்பி வந்தவர்இ செத்துப்போனதாகக் கருதப்பட்டு இப்போது திரும்பி வந்தவர் என எத்தனையோ திரும்பி வந்தவர்கள்.உடலால் திரும்பி வந்தவர்கள்.மனதால் திரும்பி வந்தவர்கள்.இந்தக் கதை போராளியாக இயக்கத்துக்குப் போய் போரில் ராணுவத்திடம் பிடிபட்டுப் பின்னர் திரும்பி வந்தவளான பவித்ரா அக்காவைப்பற்றிய கதை.தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுபோன்ற பாத்திரங்களை இதுபோன்ற தருணங்களை நாம் வாசித்த்தே இல்லை – அப்படியான வாழ்க்கையை நாம் கண்டதில்லை என்பதால்.ராஜபக்சேக்கு எதிராக்க் கையில் புலிக்கொடியோடு லண்டன் ஆர்ப்பாட்ட்த்தில் நிற்கும் அண்ணன் தான் ஒரு காலத்தில் காதலித்த பவித்ரா அக்காவை அவள் இயக்கத்திலிருந்தாள் என்பதற்காகவும் ஒன்றரை வருடம் ராணுவத்தடுப்பு முகாமிலிருந்தாள் என்பதற்காகவும் நிராகரிக்கிறான்.அவன் அப்படி நிராகரிப்பான் என்பதை பவித்ரா அக்காவும் அறிந்தே இருக்கிறாள்.சமூக நிகழ்வுகள் எப்படி மனித மனநிலைகளைத் தாறுமாறாகப் புரட்டிப்போடுகின்றன!இக்கதைக்கு இணையான சம்பவங்களை நாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது காணாமல்போய் திரும்பி வந்த பெண்கள் சந்தித்ததை வாசித்திருக்கிறோம். பவித்ரா அக்காவின் கண்ணீரில் பேப்பரில் இருந்த புலிக்கொடி கரைந்து போனது என்று இக்கதை முடிகிறது.உடனே இக்கதை புலிக்கொடியை அவமதிப்பதாக நாம் கருதிக் கொள்ளக் கூடாது.இத்தகைய பின்னணியில் உழலும் ஆண் மனம் அடையும் மாற்றங்கள் பற்றியதான ரniஎநசளயட வசரவா ஒன்றைப் பேசும் கதையாகவே பார்க்க வேண்டும்.
அரிசி கதையை வாசித்துவிட்டு பேதலித்த மனதோடு நீண்ட நேரம் மௌனத்தில் அமிழ்ந்திருக்க நேர்ந்தது.செல்லடித்துத் தாய் சாக அவளைப் புதைத்த கையோடு அம்மாவின் ரத்தம் படிந்த அரிசியைக் களைந்து சமைக்கத்தயாராகும் அக்கா பற்றியதல்ல அந்தப் பாதிப்பு.அதுபோல எத்தனையோ குடும்பங்கள் ஈழப்போராட்ட்த்தில் அனுபவித்துத்தான் விட்டன.இக்கதையில் கோழி களவாண்டு ஒரு வாய் ருசியான சோத்துக்காக அண்ணனும் அக்கா தங்கைகளும் படும் பாடுஇகுளிக்க ஆசைப்பட்ட சகோதரிகளை அழைத்துச்செல்லும் மகன்ன – பிள்ளைகள் திரும்பி வரும் வரை டார்ப்பாலினுக்குள் கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மா என விரியும் காட்சிகளே மனதைப் பேதலிக்கச் செய்தன.எழுத்து மறைந்து அந்த அவல வாழ்க்கைக்குள் நாம் போய் விடுகிறோம்.செல்லடியின்போது செல்கள் விழும் டைமிங்கை கணக்கிட்டு இடைவெளிகுள் அம்மாவைத்தேடுவதும் சத்தத்தை வைத்து அது என்னவகையான செல் என்னவகையான குண்டுவீச்சு எனச் சொல்லப்பழகிவிட்ட தமிழ் வாழ்க்கை-அதுதான் நம்மை உலுக்குவதாயிருக்கிறது.
சீட்டாட்டம் கதையும் சோசலிசம் கதையும் முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து இயக்கத்தின் லட்சணத்தைத் தோலுறித்துக் காட்டுகின்றன.சரியான கிண்டலும் பகடியுமாய்ப் போகும் இக்கதைகள் நமக்கு நகையுணர்வை ஊட்டவில்லை.மாறாகப் பல உண்மைகளைப் போட்டு உடைத்து நகர்கின்றன.அதிர்ச்சியும் துயரமுமே நமக்கு மிஞ்சுகின்றன.பவுணன்ணையின் மனைவி சொல்லும் “ ச்சா.. எல்லாம் என்ன மாதிரி மரிட்டுது.எல்லாமே சோசலிசமாய் போச்சுது…” என்கிற வசனம் நம் கண்களில் நீர் துளிர்க்க வைக்கின்றன.பேதமின்றி அவரவருக்கான அப்பத்தைக் காலம் வழங்கிச்சென்றுவிட்ட குரூரத்தை நாம் உணர்கிறோம்.
முள்வேலி முகாமுக்குள்ளிருந்து வெளியேற சிங்கள ராணுவத்தினரோடு சினேகமாக்க் கதைச்சு ஒரு ஜோக்கரைப்போல நடிச்சு ஒரு வழியாக விடுதலை பெறும் இளைஞன் வெளியே வந்த்தும் ஆகாயத்தைப் பார்த்து கண்களை மூடியபடி இன்னும் கூடிய செனேக பாவத்துடன் சொன்னான் “தமிழீழம் கிடைச்ச மாதிரியிருக்குது” என்று முடியும் பாலையடிச்சித்தர் கதை இன்றைய முள்வேலி வாழ்க்கைக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்று காட்டுகிறது.கடைசிவரி ஏதேதோ வரலாற்றுக் காலங்களை நினைவு படுத்தி சுதந்திரத்தின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்தெல்லாம் யோசிக்க வைத்துவிடுகின்றது.முகாமுக்குள் பெரும்பாலான பொடியளைப்போலவே இவனும் முகாம் வாசலைப்பார்த்தபடியே நெடுநேரம் குந்தியிருப்பான் என்கிற வரியை எளிதில் வாசித்துக் கடந்துவிட முடியவில்லை. மூர்த்தி மாஸ்ர்ர் மீது நமக்குப் பரிதாபமும் பச்சாதாபமும் ஏற்படுகின்றன.புலிக்கொடியின் வரலாறு அதன் வர்ணங்கள் பற்றிய விளக்கங்கள் என்று படியளுக்குப் பாடம் நட்த்திய அவரும் முள்ளிவாய்க்காலில் பெண்டு பிள்ளைகளோடு இயக்கத்திடமிருந்து தப்பி ராணுவத்தை நோக்கி ஓடுகிறார்.என்ன ஒரு காட்சி அது.
இத்தொகுப்பில் மிகுந்த வலியுடன் வாசித்த கதை என்று பாவமன்னிப்பு கதையைச் சொல்லுவேன்.முற்றிலும் உளவியல்ரீதியான இக்கதை பெரும் மன உளைச்சலைத் தந்த்து.ஆபாத்தில் நண்பனுக்கு உதவாமல் ஓடிவந்த குற்றம் மனதை அரிக்க பவமன்னிப்புக் கிட்டாமல் தவிக்கும் இளைஞனின் கதையாக இக்கதை நம் மனதுக்குள் இறங்குகிறது.இத்தொகுப்பின் அட்டைப்படம் இக்கதைக்காகப் போடப்பட்ட்தோ என்று தோன்றியது.
சேகுவேரா இருந்த வீடு கதை ஒரு வரலாறு.வெவ்வேறு இயக்கங்களும் இந்தியன் ஆமியும் பின்னர் சிங்கள ராணுவமும் என மாறி மாறிக் கையகப்படுத்திக்கொள்ளும் அவ்வீடு ஈழப்போராட்ட வரலாற்றின் கண் கண்ட சாட்சியாக கதையில் நின்று எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்கிறது.வீட்டின் உரிமையாளரோ வீட்டை மீட்க முடியாமல் மனம் பிறழ்ந்து இந்தியாவில் போய்ச் செத்துப்போகிறார்.
’நான் பிறந்தது இந்தியன் ஆமி நேரம்’ என்கிற ஐயனின் எஸ்.எல்.ஆர் கதையில் வரும் வரி நம்மை ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது.நம் மக்களின் நினைவுகளுக்குள் இந்தக் கொடுமையான வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் ஏறி உட்கார்ந்துவிட்டனவே. வந்தேமாதரம் பாட்டுப்பாடி அமைதிப்படையை வரவேற்ற பெரியவர் ராத்திரி ஒண்ணுக்குப்போக வெளியே வந்தபோது இருட்டில் அதே இந்தியன் ஆமியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
இத்தொகுப்பு முழுவதுமே சிங்கள ராணுவமும் புலிகள் இயக்கமும் இந்திய ராணுவமும் ஈழத்தமிழ் மக்களைப் படுத்திய பாடுகள் ரத்தமும் சதையுமாக விரிந்து கிடக்கின்றன.இக்கதைகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான கதைகள் என்று எவரும் சொல்லிவிட முடியாது.மாறாக இவை யாவும் ஒவ்வொரு வரியும் ஈழத் தமிழ் மக்களின் சார்பாக நின்று பேசப்பட்ட கதைகள்.மக்களின் பார்வையில் எல்லா இயக்கங்களையும் ராணுவங்களையும் எந்தப்பக்கமும் சார்பின்றி கேள்விக்குட்படுத்துகின்றன.இதுதான் இதுதான் இன்று ஈழபோராட்டம் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவுபெறப்போகும் இத்தருணத்தில் எல்லோருக்கும் வந்து சேர வேண்டிய மனநிலை.வரலாற்றிலிருந்து பாடம் கற்பதற்கான ஆவணமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.தமிழ் சினிமாக்காட்சிகளும் வசன்ங்களும் பாடல்களும் கதைகள் நெடுகிலும் விரவிப் பகடிக்குள்ளாக்கப்படுவது நாம் பண்பாடென்று கட்டியழுதுகொண்டிருக்கும் பலவற்றின் முகத்தில் அறைவதாக இருக்கிறது.
டுசுசுஊ அல்லது பான்கீ மூன் அனுப்பிய மூவர் குழு அறிக்கை அல்லது இனி நடக்கப்போகும் விசாரணைகள் எல்லாவற்றையும் பார்க்க இக்கதைகளே உண்மையான முழுமையான யுத்த சாட்சியமாக ஒரு கலைஞனின் அசலான பொய்களற்ற வாழ்க்கைப் பதிவுகளாக நம் கைவந்து சேர்ந்துள்ளன.தவிர இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமில்லை.மனித குல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இக்கதைகள் வெடிக்கின்றன.
மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனும் இன்று வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.
பி.கு:
இக்கதைகளை வாசிக்கும் போதெல்லாம் என் மனதில் யோ.கர்ணனையும் அவர் வயதை ஒத்த ஈழத்து இளைஞர்களையும் என் மடியில் கிடத்தித் தலை கோதி ஆற்றுப்படுத்துவது போலவும் அவர்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்வதுபோலவும் கரங்கள் குலுக்கி ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பது போலவும் அட்டைப்பட்த்தில் உள்ளதுபோல என் தலையை நான் பிடித்துக் கதறுவதுபோலவுமான பலப்பலகாட்சிகள் சித்திரமாக தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
நாம வேற என்னத்துக்குத்தான் ஆகப்போறோம்?
சே குவேரா இருந்த வீடு
சிறுகதைகள்-யோ.கர்ணன்
வடலி வெளியீடுஇ
டி 2ஃ5இ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்இதெற்கு சிவன்கோவில் தெருஇ
கோடம்பாக்கம்இசென்னை-600024
தமிழ்நாடு-+919789234295
கனடா- +16478963036
மின்ன்ஞ்சல்- ளயடநளஎயனயடல@பஅயடை.உழஅ
விலை ரூ. 80ஃ-பக்கம் 128
-ச.தமிழ்ச்செல்வன்
ஞாபகத்தின் தெருக்களில் அலையும் வழிப்போக்கன்